வணக்கம்...   

இந்த சமுதாயத்தின் மீது உள்ள என் பார்வை, எனது அக்கறை மற்றும் எனது கருத்துக்களை ங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் அத்துடன் உங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்கிறேன்.

உலகம் வெப்பமயமாதல்:

பூமி வெப்பமயமாதலுக்காக நாம் எடுத்துவரும்  அனைத்து முயற்சிகளும் தற்காலிகமான மற்றும் சிறிய மாற்றங்களை மட்டுமே தர இயலும். மரங்களை எங்கும் வளர்ப்பது மட்டுமே மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

கலாச்சார சீர்கேடு:

அறிவியல், தொழில் நுட்பம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் ஏராளமான வளர்ச்சியை நாம் அடைந்தாலும் மனிதன் மேம்படவில்லை. இதற்க்கு ஒரே தீர்வு என்னவென்றால் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதலே நன்னெறிகள், நல்லொழுக்கம், மனித நேயம், ஆன்மீகம் மற்றும் அன்பினை போதிக்க வேண்டும்.

தீவிர வாதம்:

நமது பார்வையை நாம் மாற்றியாக வேண்டும். தீவிர வாதத்தை   பார்ப்பதை விடுத்து, தீவிர வாதியை பற்றி ஆய்வோம். இவர்கள் யார்? இவர்களும் மனிதர்கள் நம்மோடு  தான் வாழ்கிறார்கள். எப்படி தீவிர வாதியானார்கள் என்பது தான் இங்கே முக்கியமானதாக அமைகிறது.

இவர்கள் ஏழ்மை, அறியாமை, நல்ல சூழ்நிலையில் வளராமை, புறக்கணிக்கப்பட்டு, நல்ல வழிகாட்டுதல் இன்றி தடம் மாறி தடுமாறி பாவப்பட்ட மனிதர்கள். இதற்கு நமது பங்கும் உண்டு.நாம் தான் இதனை மாற்றியாக வேண்டும். கல்வி கொடுக்கப்பட வேண்டும். அடிப்படை உரிமைகளை, வேலை வாய்ப்புக்களை, சமூக ஒற்றுமை நிலை நாட்டப்பட வேண்டும்.

நெரிசல் மிகு நகர வாழ்கை:

நெரிசல் மிகு நகர வாழ்க்கையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். போக்குவரத்து நெரிசல், மாசடைந்த காற்று,நீர் மற்றும் நிலம் என அடுக்கிகொண்டே போகலாம். இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட, புதிய,புதிய நகரங்களை  மாநிலம் முழுதும் ஏற்படுத்தி வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும். சமசீர்மை வேண்டும். ஒரே இடத்தில தொழிற்சாலைகள் குவிவதை கட்டுப்படுத்த வேண்டும்.

வியாபாரமாகும் கல்வி:

கல்வி மனிதனை பக்குவப்படுத்துகிறது. பன்படுத்துகிறது. நமது சமுதாயத்தை பற்றிய அறிவை தருகிறது. இதற்காகவேதான் நாம் கல்வி கற்று வந்தோம். ஆனால் இந்நாட்களில் கல்வி ஒரு  வியாபாரமாகி விட்டது. கல்வி கற்றல் ஒரு முதலீட்டாக மாறி விட்டது. இந்த நிலை கண்டிப்பாக  மாறியாக வேண்டும். தரமான கல்வி எங்கும் யாவருக்கும் எளிதில் கிடைத்திட வேண்டும். பணம் படைத்தவர் மட்டுமே உயர் கல்வி பெற முடியும் என்ற நிலை மாறி, படிக்க விரும்பும் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைத்திட வகை செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வியை  விலை பேசி விற்பது தடை செய்யப்பட வேண்டும். கல்வியில் புரட்சியும் புதுமையும் உடனடியே கொண்டு வர வேண்டும்.

உருமாறும் அரசியல்:

இந்த சமுதாயத்தின் மீது ஈர்ப்பு கொண்டு உண்மையாக தொண்டாற்ற விரும்புபவாரல் அரசியலில் பங்கேற்க இயலவில்லை. மாறாக பணம் படைத்த, படை கொண்ட, தந்திரம் கொண்ட, அரசியல் பாரம்பரியம் கொண்ட மனிதர்களால் மட்டுமே அரசியலில் சிறப்புடன் பங்கேற்க முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்காது. எதிரான விளைவுகளையே தரும். இந்த நிலையும் முழுமையாக களையப்பட வேண்டும்.

பார்வை இழந்த பணக்காரர்கள்:

கடவுளையே பங்குதாரர்களாக்கி, தங்கள் நிறுவனத்தின், குறிப்பிட்ட சதவீத லாபத்தை கோவில் உண்டியலில் கொண்டு கொட்டும் படித்த மேதைகள் - குறுக்கு வழியில் மக்கள் பணத்தை சுருட்டி, கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் வாதிகள் - பல தலைமுறைகளுக்கு பணத்தை குவித்து வைத்திருகுக்கும் பரம்பரை செல்வந்தர்கள் போன்ற ஏனையோர்கள்..... இவர்களுடனே மனிதர்களாக பிறந்து உன்ன உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி நம் சமூகத்து மனிதர்கள் - பிச்சைக்காரர்களாக, திருடர்களாக, வாழ வழிதெரியாது இவர்கள் படும் இன்னல்களை எப்படி பார்க்க மறந்தார்கள். இவர்களின் பார்வை இந்த மனிதர்களை நோக்கி இருந்தால், இவர்களால் நல்ல சமுதாய மாற்றத்தை தர இயலும். நல்ல ஒரு உதாரணத்தை உருவாக்க முடியும்.